வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, துறை அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:-
கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், கிராமப்பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகளிர் திட்டத்தின் கீழ், சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 16 சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் மகளிர் திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கடன் வாராக்கடனாக உள்ளது.
கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி
குளச்சல் நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீர் ஏ.வி.எம். கால்வாயில் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்த கழிவுநீரினை சேகரிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளிலேயே தொட்டி அமைக்க வேண்டும்.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை மேம்படுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளை துரிதமாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளர்ச்சித்திட்ட பணிகள்
குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் தயாரிக்கப்படும் பால், நெய் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்டவை ஆவின் பாலகங்களின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இப்பொருட்களை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை, அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அதிகாரிகள் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு மனோ தங்கராஜ் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், திட்ட இயக்குனர்(ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பத்ஹூ முகமது நசீர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.