பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் அணைமேடு பகுதி நிலத்தை தனியாருக்காக அளவீடு செய்ய வந்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-11 17:30 GMT
திருப்பூர்
திருப்பூர் அணைமேடு பகுதி நிலத்தை தனியாருக்காக அளவீடு செய்ய வந்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். 
அணைமேடு
திருப்பூர் மாநகராட்சி ராயபுரம் அணைமேடு பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். கடந்த 2010ம் ஆண்டு திருப்பூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி அந்த பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருவதால் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு உத்தரவிட்டார். மின் இணைப்பு பெற்று மக்கள் அங்கு தொடர்ந்து வசித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் திருப்பூரை சேர்ந்த தனியார் ஒருவர், அணைமேடு பகுதியில் சம்பந்தப்பட்ட 3 ஏக்கர் 60 சென்ட் இடம் தனக்கு சொந்தமானது என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். கடந்த 2019ம் ஆண்டு அவருக்கு ஆதரவாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்க சென்னை ஐகோர்ட்டு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய சென்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பால் அளவீடு செய்யப்படவில்லை.
சாலை மறியல்
இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறி சம்பந்தப்பட்ட தனியார், மீண்டும் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் நிலத்தை அளவீடு செய்து வழங்க கோர்ட்டு வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை ராயபுரம் அணைமேடு பகுதியில் அளவீடு செய்வதற்காக நில அளவையாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் வந்தனர். இதை அறிந்ததும் அப்பகுதியில் வசிக்கும் 100க்கும் மேற்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். பின்னர் தங்கள் குழந்தைகளுடன் அணைமேடு செல்லும் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 2010ம் ஆண்டு திருப்பூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி தங்களுக்கு உத்தரவாதம் அளித்த நிலையில், அதை மறைத்து கோர்ட்டில் வழக்கு தொடுத்து உத்தரவு பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள், எம்.எல்.ஏ. விடம் முறையிட்டனர். மக்கள் பாதிக்காத வகையில் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு க.செல்வராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
 அதிகாரிகள் திரும்பி சென்றனர்
பின்னர் மதியம் 12 மணிக்கு திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெகநாதன் மற்றும் அதிகாரிகள் அணைமேடு பகுதிக்கு வந்தனர். கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் வகையில் அளவீடு செய்ய வேண்டும் என்று தாசில்தார் கூறினார். ஆனால் அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கோர்ட்டில் வழக்கு தொடுத்தது தொடர்பாக தங்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்றும், தங்கள் கருத்தையும் கேட்டு அறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து அளவீடு செய்யாமல் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்