நிலக்கடலை அறுவடை தீவிரம்

உடுமலை பகுதியில் நிலக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மகசூல் இழப்பால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2021-08-11 17:16 GMT
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் நிலக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மகசூல் இழப்பால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
எண்ணெய் வித்து பயிர்கள்
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அத்துடன் கொப்பரை உற்பத்தி மற்றும் அதிலிருந்து தேங்காய்எண்ணெய் எடுப்பது போன்ற தொழில்களும் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் மற்ற எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள் போன்றவற்றின் சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நடவு, களையெடுத்தல், உரமிடுதல், அறுவடை போன்ற பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகும். அடுத்ததாக பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மகசூல் இழப்பும் விவசாயிகளுக்கு எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடியில் ஆர்வக் குறைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் தற்போது உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளான ராகல்பாவி, தேவனூர்புதூர் போன்ற ஒருசில பகுதிகளில் மானாவாரியில் மட்டுமல்லாமல்இறவைப் பாசனத்திலும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி மேற்கொள்கின்றனர். அந்தவகையில் உடுமலை பகுதியில் தற்போது நிலக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் போதிய மகசூல் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மகசூல் இழப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
ஆண்டுக்கு 2 முறை நிலக்கடலை சாகுபடிக்கு சிறந்த பருவங்களாக கருதப்படுகிறது. அந்தவகையில் ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. செம்மண் நிலங்களில் கடலை நல்ல மகசூல் கொடுக்கும். அதே நேரத்தில் மண் இறுக்கமாக இருந்தால் அது மகசூலைப் பாதிக்கும். ஏக்கருக்கு 50 கிலோ அளவுக்கு விதைகள் தேவைப்படும். உடுமலை பகுதியைப் பொறுத்தவரை சித்திரைப் பட்ட கடலை சாகுபடி சிறப்பாக இருக்கும். அதனைக் கருத்தில் கொண்டு சித்திரைப் பட்டத்தில் சாகுபடி செய்த நிலக்கடலையில்அறுவடைப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முளைப்பு, பூத்தல், காய் உருவாகுதல் ஆகிய பருவங்களில் நிலத்தில் ஈரப்பதம் இருப்பது நல்ல மகசூலைக் கொடுக்கும். ஆனால் சரியான பருவத்தில் தென்மேற்குப் பருவமழை கைகொடுக்காததால் மகசூல் குறைந்துள்ளது. தற்போது அறுவடை செய்த நிலக்கடலையை உலர்களங்களில் உலர வைத்து விற்பனைக்குத் தயார் செய்கிறோம். ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்துள்ள நிலையில் போதிய விலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்