தளி
தளி பகுதியில் தென்னை மரங்கள் கருகி வருகிறது.
தென்னை சாகுபடி
உடுமலை, தளி, அமராவதி சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதிஅணைகள், கிணறு ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் பருவமழையை ஆதாரமாக கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரும்பு, வாழை, தென்னை போன்ற ஆண்டு பயிர்களும், காய்கறிகள், கீரைவகைகள், தானியங்கள், நீர்வரத்து மற்றும் நீர்இருப்புக்கு ஏற்றவாறு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.சாகுபடி பணிகளை நம்பி எண்ணற்ற கூலித்தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த வறட்சியால் உடுமலை பகுதியில் உள்ள நீராதாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கருகி வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் அமராவதிஅணை மற்றும் திருமூர்த்திஅணையின் உயிர்நாடியான பி.ஏ.பி. தொகுப்பு அணைகளின் நீராதாரங்களில் மழை தீவிரம் அடைந்தது.
இதன் காரணமாகஅமராவதிஅணைக்கும் காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்திஅணைக்கும் நீர்வரத்து ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.இதையடுத்து சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கருகும் தென்னை மரங்கள்
ஆனால் பாசன பரப்புகளில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.இதனால் கிணறு,ஆழ்குழாய் கிணறுகளை ஆதாரமாகக் கொண்ட சாகுபடி பணிகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்னை மரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது.
தென்னை மரங்கள் வறட்சியில் சிக்கித் தவிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.