வால்பாறை மலைப்பாதை காட்சி முனைக்கு செல்ல தடை

ஆபத்தாக நின்று செல்பி எடுப்பதால் வால்பாறை மலைப்பாதை காட்சி முனைக்கு செல்ல தடை விதித்து உள்ளதுடன், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-08-11 16:56 GMT
பொள்ளாச்சி

ஆபத்தாக நின்று செல்பி எடுப்பதால் வால்பாறை மலைப்பாதை காட்சி முனைக்கு செல்ல தடை விதித்து உள்ளதுடன், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 

அத்துமீறல்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது பொள்ளாச்சி வனச்சரகம். இங்குள்ள வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதை தவிர அரிய வகை பறவை மற்றும் தாவர இனங்களும் உள்ளன. 

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சி, வால்பாறை, டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

ஆனால் சிலர் வால்பாறைக்கு சொந்த தேவைக்கு செல்வதாக கூறி மலைப்பாதையில் ஆங்காங்கே நின்கின்றனர். 

செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள் 

மேலும் ஆபத்தை உணராமல் உயரமான பகுதியில் நின்று செல்போனில் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். மேலும் சிலர் அத்துமீறி வனப்பகுதிக்குள் செல்கின்றனர். 

இதை தடுக்க பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் முட்செடிகளை போட்டு வனத்துறையினர் தடுப்புகள் அமைத்து உள்ளனர். 

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நுழைவு வாயில் பூட்டப்பட்டு உள்ளது. மேலும் சோதனை சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, வால்பாறையை சேர்ந்த மக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கிறது.

காட்சி முனைக்கு செல்ல தடை 

ஆனால் சிலர் வால்பாறைக்கு செல்வதாக கூறி மலைப்பாதை யில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளை காட்சி முனைக்கு செல்கின்றனர். அங்கு நுழைவு வாயில் பூட்டப்பட்டு இருந்தாலும் சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று விடுகிறார்கள். 

இதைத்தடுக்க முட்செடிகள் கொண்டு அடைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி யாராவது சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் யானைகள் நடமாட்டம் உள்ள ஆழியாறு அணை பகுதி உள்பட மலைப்பாதையில் சில இடங்களில் மரம், செடிகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு யாரும் செல்லக்கூடாது. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்