தடையை மீறி சுருளி அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள்; அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்
கம்பம் அருகே தடையை மீறி சுருளி அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
கம்பம்:
கம்பம் அருகே சுற்றுலா தலமாக விளங்கும் சுருளி அருவி உள்ளது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக வருகை தருவார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருவதை கண்காணிக்க சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகம், ராயப்பன்பட்டி போலீசார், வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, சுருளி அருவி சோதனை சாவடியில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று தடையை மீறி சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் சிலர் வந்தனர். அவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும் வரை சுருளி அருவிக்கு யாரும் வர வேண்டாம் என்றனர்.