3 கொலை வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு
விழுப்புரம் கோர்ட்டில் ஒரே நாளில் 3 கொலை வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது.
விழுப்புரம்,
விவசாயி கொலை வழக்கு
விழுப்புரம் அருகே ஏ.குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 43), விவசாயி. இவரது குடும்பத்தினர் அதே பகுதியில் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு அந்த இடத்தில் கழிவறை தொட்டி அமைக்க பள்ளம் தோண்டினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம், சவுந்தர்ராஜன், குமார், செல்வம், குமரவேல், அஜித், சரவணன், அருள், முத்து, மண்ணாங்கட்டி, மணிகண்டன், ரஞ்சித், நாகராஜன், சூர்யகுமார், லட்சுமணன் ஆகியோர் அங்கு வந்து அப்பணியை தடுத்து நிறுத்தி, அய்யனார் குடும்பத்தினரிடம் தகராறு செய்தனர்.
இதுகுறித்து அய்யனாரின் தந்தை ஆறுமுகம், விழுப்புரம் தாலுகா போலீசில் வெங்கடாசலம் உள்ளிட்ட 15 பேர் மீதும் புகார் செய்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 7.10.2016 அன்று ஆறுமுகம், அவரது மகன்கள் அய்யனார், சிவகண்டன், உறவினர் ஆனந்தன் ஆகியோரை வெங்கடாசலம் உள்ளிட்ட 15 பேரும் சேர்ந்து வழிமறித்து தாக்கினர். அப்போது கத்தியால் குத்தப்பட்டதில் அய்யனார் இறந்தார்.
6 பேருக்கு ஆயுள் தண்டனை
இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் வெங்கடாசலம் உள்ளிட்ட 15 பேரை விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், குற்றம் சாட்டப்பட்ட வெங்கடாசலம் (61), சவுந்தர்ராஜன் (29), குமார் (38), செல்வம் (36), குமரவேல் (30), அஜித் (22) ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியதோடு மற்ற 9 பேரையும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சீனிவாசன் ஆஜரானார்.
பெண் கொலையில் கணவருக்கு ஆயுள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மலைமேடு பகுதியை சேர்ந்தவர் கப்பல்துரை (47), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுசீலா (35). இவர்கள் இருவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்நிலையில் கப்பல்துரை, தனது மனைவி சுசீலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த 9.5.2015 அன்று கப்பல்துரை, தனது வீட்டிற்கு வந்தபோது சுசீலா, ஒரு நபருடன் பேசிக்கொண்டிருந்தார். இதை பார்த்ததும் ஆத்திரமடைந்த கப்பல்துரை, சுசீலாவை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கப்பல்துரையை கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட கப்பல்துரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராதிகா செந்தில் ஆஜரானார்.
மற்றொரு வழக்கு
திருக்கோவிலூர் பெண்ணைவலத்தை சேர்ந்தவர் கூத்தான். இவருடைய மனைவி பார்வதி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் சுகுமார்(28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக தவறாக நினைத்த கூத்தான், சுகுமார் வீட்டிற்கு சென்று அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த சூழலில் பார்வதி, எங்கேயோ சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த 13.2.2016 அன்று கூத்தான் தனது தந்தை தண்டபாணி, தம்பி சந்திரபாபு, தாய் செந்தாமரை ஆகியோருடன் சுகுமார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது தந்தை பரமசிவத்திடம் எனது மனைவியை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு திட்டியுள்ளார். இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த சுகுமாரை கூத்தான் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த சுகுமார், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 14.2.2016 அன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூத்தான் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன், குற்றம் சாட்டப்பட்ட கூத்தானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியதோடு மற்ற 3 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேலவன் ஆஜரானார்.