மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், கொடைரோடு, பழனி ஆகிய ரெயில் நிலையங்கள் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் ஸ்டாலின், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ரெயில்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும்.
நடைமேடை டிக்கெட் கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்தியதை கைவிட வேண்டும். அனைத்து ரெயில் நிலையங்களிலும் நகரும் படிக்கட்டுகள், லிப்டுகள் அனைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் கோரிக்கைகள் குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
இதேபோல் பழனி ரெயில் நிலையம் முன்பு சங்க மாநில செயலாளர் வெங்கடேஷ் தலைமையிலும், கொடைரோடு ரெயில் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.