கோவையில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கோவையில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Update: 2021-08-11 16:27 GMT
கோவையில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கோவை

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருடைய சகோதரர்களான அன்பரசன், செந்தில்குமார், மற்றும் நெருக்கமான நண்பர்களான சந்திரசேகர், சந்திரபிரகாஷ், மைத்துனர் சண்முகராஜா ஆகியோரது வீடுகள் உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். 


கோவையில் மட்டும் சுமார் 42 இடங்களில் 11 மணிநேரம் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் 13 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வேலுமணிக்கு நெருக்கமானவரான சந்திரபிரகாசுக்கு சொந்தமான கே.சி.பி.என்ஜினீயரிங் நிறுவனத்தின் சென்னை மற்றும் கோவை அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.


இதற்கிடையே நெஞ்சுவலி காரணமாக சந்திரபிரகாஷ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை பீளமேடு அவினாசி சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி வர்த்தக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கே.சி.பி என்ஜினீயரிங் நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரண்டு தளங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், மூன்றாவது தளத்தில் நேற்று காலை 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது.

2-வது நாளாக நடந்த இந்த சோதனையின்போது அலுவலகத்தில் இருந்த கணினியில் உள்ள தகவல்களை பதிவு செய்தனர். 

எந்தெந்த டெண்டர்கள் எடுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தொடர்பாக சோதனையின்போது அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். டெண்டர் தொடர்பான கணினி டிஸ்க்குகள், ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. 

இதேபோல் மதுக்கரை ஒன்றியம் பாலத்துறையில் செயல்பட்டு வரும் வி.எஸ்.ஐ. எம்.சான்ட் குவாரியிலும் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனங்களில் 2-வது நாளாக நடந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்