விழுப்புரம் பகுதியில் நள்ளிரவில் இடி மின்னலுடன் பலத்த மழை மின் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் அவதி
விழுப்புரம் பகுதியில் நள்ளிரவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
விழுப்புரம்,
பலத்த மழை
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. விழுப்புரத்திலும் கடந்த சில வாரங்களாக பகலில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை, இரவு வேளைகளில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலையில் இருந்து மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 4 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடனும், மப்பும் மந்தாரமுமாகவும் காட்சியளித்தது. 6.30 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரமாக கொட்டித்தீர்த்தது.
தேங்கி நின்ற மழைநீர்
அதன் பிறகு மழை ஓய்ந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் மீண்டும் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு பலத்த மழையாகவும், சாரல் மழையாகவும் பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
பலத்த மழையினால் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. அதுபோல் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலும் மழைநீர் தேங்கியதால் பயணிகள் அவதியடைந்தனர். உடனே நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று தேங்கியிருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
மின் இணைப்பு துண்டிப்பு
மேலும் விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், காணை, வளவனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி, கல்பட்டு, சிந்தாமணி, அய்யூர்அகரம், கப்பியாம்புலியூர், குச்சிப்பாளையம், பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இந்த மழையின்போது விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், காகுப்பம், ராகவன்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். பின்னர் நேற்று காலை மேற்கண்ட பகுதிகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று அறுந்து கிடந்த மின்வயர்களை சரிசெய்து மீண்டும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 6.45 மணி முதல் 7.45 வரை திண்டிவனம் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.