போடி அருகே கியாஸ் சிலிண்டரை திறந்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீண்டும் விஷத்தை குடித்ததால் பரபரப்பு

போடி அருகே கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீஸ்காரர் காப்பாற்றினார். அந்த பெண் விஷம் குடித்து மீண்டும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2021-08-11 16:23 GMT
தேனி:
போடி அருகே கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீஸ்காரர் காப்பாற்றினார். அந்த பெண் விஷம் குடித்து மீண்டும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
தற்கொலை முயற்சி
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் சாந்தி (வயது 28). இவர், திருமணமாகி வெளியூரில் வசித்து வந்தார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாந்திக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை, லட்சுமி தனது வீட்டுக்கு அழைத்து வந்து மருத்துவ பார்த்தார். அப்போது தனது மகளின் நகையை அடகு வைத்து, லட்சுமி மருத்துவ சிகிச்சை அளித்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தி, தனது தாயிடம் அடகு வைத்த நகையை திருப்பிக் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதுதொடர்பாக தாய், மகளுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் சாந்தி தனது தாயிடம் மீண்டும் தகராறு செய்தார். அப்போது நகையை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். பின்னர் சாந்தி தனது தாயின் வீட்டுக்குள் சென்று கதவை உள் பக்கமாக பூட்டிக் கொண்டார். அவருடைய தாய் வீட்டுக்கு வெளியே நின்றார். வீட்டுக்குள் சென்ற அவர் சமையல் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார். அப்போது அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து அவரிடம் பேசி பார்த்தனர். ஆனாலும், அவர் தற்கொலை முடிவை கைவிட மறுத்து விட்டார். இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு அதன் வாடை வீட்டுக்கு வெளியே வரை பரவியது.
போலீஸ்காரர் காப்பாற்றினார்
இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ்காரர் சுரேஷ் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தற்கொலைக்கு முயன்ற சாந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், அவர் தற்கொலை செய்து கொள்வதாக தொடர்ந்து மிரட்டினார். இதையடுத்து சுரேஷ், கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். தனது உயிரை பணயம் வைத்து வீட்டுக்குள் சென்று சிலிண்டரை வெளியே தூக்கி வந்து சாந்தியை தற்கொலை செய்ய விடாமல் தடுத்தார். பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரை கூறிவிட்டு சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை சாந்தி மீண்டும் தனது தாயுடன் ஏற்பட்ட தகராறில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
தற்கொலை முயன்ற பெண்ணை போலீஸ்காரர் காப்பாற்றிய நிலையில், அந்த பெண் விஷத்தை குடித்து மீண்டும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தற்கொலைக்கு முயன்ற பெண்ணை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய போலீஸ்காரர் சுரேசை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டினார்.

மேலும் செய்திகள்