நூலகத்தில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலகம் புத்தகங்கள் படிக்க முடியாமல் மாணவ-மாணவிகள் பாதிப்பு
திருமருகல் அருகே நூலகத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்படுவதால் புத்தகங்கள் படிக்க முடியாமல் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திட்டச்சேரி,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் நூலகம் உள்ளது.இந்த நூலகம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.இந்த நூலகத்தில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் திருக்கண்ணபுரம் ஊராட்சி சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் புத்தகங்களை வாசித்து வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நூலகம் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சேதமடைந்ததால் தற்காலிகமாக நூலகத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வரை கிராம நிர்வாக அலுவலகம் மாற்றப்படாமல் அங்கேயே செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நூலகம் இல்லாமல் வெளியூருக்கு சென்று புத்தகங்கள் எடுத்து வந்து படித்து வந்தனர்.
தற்போது கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் வெளியில் சென்று புத்தகங்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றி நூலகம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.