தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ரெயில்களில் மீண்டும் சிறப்பு பெட்டிகளை பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
ரெயில்களில் மீண்டும் சிறப்பு பெட்டிகளை பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தி நேற்று தூத்துக்குடி ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் தூத்துக்குடி ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எம்.மருதபெருமாள், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க செயலாளர் பி.ஜெயராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ரெயில் பெட்டிகளை பயன்பாட்டுக்கு மீண்டும் திறந்து விட வேண்டும். ரெயில் நிலையங்களில் மின் தூக்கி, நகரும் படிக்கட்டுக்களை உடனே இயக்கிட வேண்டும். புதுச்சேரி, சண்டிகர் யூனியன் பிரதேசங்களில் வழங்குவதை போல் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோலுக்கு மானியம் வழங்கிட வேண்டும். நடைமேடை கட்டணம் ரூ.50 என்பதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஏ. கண்ணன் தலைமை தாங்கினார். அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் எம்.சக்கரையப்பன் தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர் முத்துமாலை, நகர தலைவர் அந்தோணிராஜ், வில்லிசேரி ராமசந்திரன், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், நகர செயலாளர் குருநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.