தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தம்பி வீட்டில் துணிகர கொள்ளை

தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தம்பி வீட்டில் துணிகரமாக புகுந்த மர்ம நபர்கள் ரூ.3 லட்சம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

Update: 2021-08-11 12:11 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தம்பி வீட்டில் துணிகரமாக புகுந்த மர்ம நபர்கள் ரூ.3 லட்சம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
அமைச்சரின் தம்பி
தூத்துக்குடி கே.டி.சி.நகரை சேர்ந்தவர் சுதானந்தன் (வயது 61). டாக்டர். இவர் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தம்பி ஆவார். 
சுதானந்தன் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் உடன்குடி அருகே தண்டுபத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சுதானந்தன் வீட்டின் முன்பக்க கிரில்கேட், கதவு உள்ளிட்டவை உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அவரது கார் டிரைவர், சுதானந்தனுக்கு தகவல் தெரிவித்தார். நேற்று காலையில் அவர் தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த தங்கநகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 
ரூ.3 லட்சம் நகை கொள்ளை
இந்த சம்பவம் குறித்து உடனடியாக தூத்துக்குடி சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 
அப்போது, வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு இருந்த கபோர்டுகளை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த தங்க சங்கிலி, வளையல், மோதிரம், நாணயம் உள்ளிட்ட 15 பவுன் நகைகள், வெள்ளி குத்து விளக்கு, தட்டு உள்ளிட்ட வெள்ளி பொருட்களையும் கொள்ளை அடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வலைவீச்சு
மேலும், கைரேகை பிரிவு உதவி இயக்குனர் கலாலட்சுமி தலைமையிலான கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த துணிகர கொள்ளை குறித்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம் விசாரணை நடத்தி, இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார். 
தூத்துக்குடியில் அமைச்சரின் தம்பி வீட்டில் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்