காஞ்சீபுரம் அருகே கொடுத்த நகையை திருப்பி தராததால் நிலத்தரகரை கொல்ல முயற்சி - நண்பர் கைது
காஞ்சீபுரம் அருகே கொடுத்த நகையை திருப்பி தராததால் நிலத்தரகரை கொல்ல முயன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த சந்தவேலூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 40). நிலத்தரகராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் காமராஜர் நகரை சேர்ந்த சிவராஜ் (32). இவரிடம் அவசர தேவைக்காக அய்யப்பன் 5 பவுன் நகையை வாங்கியுள்ளார்.
இதனை சிவராஜ் பலமுறை கேட்டும் கொடுக்காததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் அய்யப்பன் காஞ்சீபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க நகையை வாங்கி்கொண்டு வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஓட்டிவந்த சிவராஜ், அய்யப்பன் மீது வேண்டுமென்றே மோதி விபத்து ஏற்படுத்தி பின்னர் ஆம்புலன்சில் வைத்திருந்த கட்டையால் அய்யப்பனை தலை மற்றும் வலது கையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அய்யப்பன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அய்யப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.