ராயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகள் ஆர்ப்பாட்டம்
ராயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரத்தில் ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் வெங்கடேஸ்வரி என்பவர் தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டில் உள்ள மருத்துவ பரிசோதனை எந்திரங்களை தூய்மையாக முறையாக பராமரிக்கவில்லை, என்று கூறி அங்கு பணியிலிருந்த நர்சு யுவராணியை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நர்சுகள் புவனேஸ்வரி, பத்மசாந்தி, தனலட்சுமி ஆகியோர் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரியிடம் கேட்டுள்ளனர். அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியதாக நர்சுகள் தரப்பில் கூறப்படுகிறது. இதை கண்டித்து, நேற்று மதியம் 40-க்கும் மேற்பட்ட நர்சுகள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெண் அதிகாரியை கண்டித்து கோஷமிட்டனர். தகவலறிந்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜி, ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம்ஸ் மூர்த்தி, ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் உக்கிரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.