பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதமாக விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், புதிதாக கட்டப்படும் கட்டிடம் மற்றும் இடிப்பாட்டு கழிவுகள் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவதற்கு கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் மறுபயன்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிறிய அளவில் கட்டிடக் கழிவுகளை கொட்ட அந்தந்த மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் கட்டிடக் கழிவுகளை இந்த இடங்களில் மட்டுமே கொண்டு கொட்ட வேண்டும். இதை மீறுபவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில் பொது இடங்களில் 1 டன் அளவுக்கு குறைவாக கட்டிடக் கழிவுகள் கொட்டுபவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், 1 டன் அளவுக்கு அதிகமாக கட்டிடக் கழிவுகள் கொட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.