5 மாதங்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 28 ஆயிரமாக குறைந்தது

சுமார் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 28 ஆயிரமாக குறைந்தது. சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்துக்கு கீழ் வந்தது.

Update: 2021-08-11 02:39 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் தணிந்து வருகிறது. இருப்பினும், சில நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

நேற்று முன்தினம் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 204 ஆக குறைந்தது. கடந்த 147 நாட்களில், அதாவது சுமார் 5 மாதங்களில் இதுதான் மிகக்குறைந்த அளவாகும்.

நேற்று முன்தினம் 15 லட்சத்து 11 ஆயிரத்து 313 சளி மாதிரிகளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில்தான், 28 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 1.87 சதவீதமாக உள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் 2.36 சதவீதமாக பதிவாகி உள்ளது. இத்துடன், இதுவரை கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரத்து 158 ஆக உயர்ந்தது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரத்து 968 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 97.45 சதவீதம்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை சமீபநாட்களாக குறைந்து வருவது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், இந்த எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 680 குறைந்துள்ளது.

அதனால், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது. 3 லட்சத்து 88 ஆயிரத்து 508 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 139 நாட்களில் இதுதான் மிகக்குறைந்த அளவாகும். இது மொத்த பாதிப்பில் 1.21 சதவீதம்.

அதுபோல், 24 மணி நேர பலி எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 447 பேர் உயிரிழந்தனர். ஆனால், நேற்று 373 பேராக உயிரிழப்பு குறைந்தது. அதிகபட்சமாக கேரளாவில் 105 பேரும், மராட்டிய மாநிலத்தில் 68 பேரும் இறந்தனர்.

மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது. பலி விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது.

மேலும் செய்திகள்