திருச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்;கடையின் உரிமையாளர் கைது

திருச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-11 01:38 GMT
மலைக்கோட்டை,

திருச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

புகையிலை பொருட்கள்

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைத்தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, அவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள். 

இந்த நிலையில் பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினா் திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள சீனிவாசன் (வயது 45) என்பவரது கடையை ஆய்வு செய்தனர். அந்த கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. 

பறிமுதல்-கைது

அங்கு 100-க்கும் மேற்பட்ட குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஆண்டாள் தெருவில் உள்ள சீனிவாசன் வீட்டை ஆய்வு செய்தபோது, அங்கு வீட்டில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 125 கிலோ பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். மேலும் கடை உரிமையாளரான சீனிவாசன் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
புகார் செய்யலாம்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு கூறுகையில், ‘புகையிலை பொருட்களை சீனிவாசன், தனது வீட்டில் பதுக்கி வைத்து அவ்வப்போது கடைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் வந்தது. ரூ.10 விலையுள்ள புகையிலை பாக்கெட்டை, அதிகாரிகளின் கடும் கெடுபிடி காரணமாக ரூ.50 வரையில் விலையை கடுமையாக உயர்த்தி விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்துள்ளார்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்பட்டு மூடப்படும் என்றும், பொதுமக்களும் தமிழக அரசால் தடை செய்யபட்ட அல்லது கலப்பட உணவு பொருட்கள் கண்டறியபட்டால் 99449 59595, 95859 59595 என்ற எண்களுக்கு புகார் செய்யலாம்’ என்றார்.

மேலும் செய்திகள்