வங்கியாளர்கள் கூட்டம்: ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 337 கோடி கடன் இலக்கு- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 337 கோடி கடன் இலக்கு உள்ளதாக மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 337 கோடி கடன் இலக்கு உள்ளதாக மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
வங்கியாளர் கூட்டம்
ஈரோடு மாவட்ட வங்கியாளர்கள் குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2021-2022 நிதி ஆண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட கடன் இலக்கு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
ஈரோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வேளாண்மை துறை, மீன்வளத்துறை, கைத்தறித்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் உள்ளன.
ரூ.13 ஆயிரத்து 337 கோடி இலக்கு
இந்த கடன்களை தொடர்புடைய வங்கிகள் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். 2021-2022-ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 336 கோடியே 81 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கடன் தொகையை அந்தந்த வங்கிகள் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அப்போதுதான் அரசு துறைகள் மீதும், வங்கிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். விண்ணப்பித்து நிலுவையில் உள்ள கடன் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, கடன்களை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன், சிறு-குறு தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் வழங்குவதில் எந்த புகார்களுக்கும் இடம் அளிக்காமல் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
கடன் உதவி
கூட்டத்தின் போது ஸ்டேட் வங்கி சார்பில் 30 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் கடன் உத்தரவுகள் வழங்கப்பட்டது. இதுபோல் கனரா வங்கி சார்பில் 16 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளுக்கான உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் பயிற்சி கலெக்டர் ஏகம் ஜெ.சிங், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், தாட்கோ மேலாளர் ஜெயந்தி மற்றும் அனைத்து வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.