சேலம் மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு தொற்று: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு- 3 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.
மீண்டும் அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 85 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரித்து 92 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். இதில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 22 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 52 பேரும், ஆத்தூர் பகுதியில் 11 பேரும், நகராட்சி பகுதிகளில் 7 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 83 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 847 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 63 வயதுடைய முதியவரும், 51 வயதுடைய பெண்ணும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி அரசு ஆஸ்பத்திரிகளில் பலியாகினர். சேலத்தை சேர்ந்த 85 வயதுடைய முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இவர்கள் உள்பட மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1,594 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.