ஓமலூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற வாலிபர்-பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

ஓமலூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.;

Update: 2021-08-10 22:15 GMT
ஓமலூர்:
ஓமலூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஏ.டி.எம். எந்திரம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கணவாய் புதூர் ராமமூர்த்தி நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் வங்கிக்கு முன்பே வைக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கியின் அருகிலேயே ராமமூர்த்தி நகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் மற்றும் குடியிருப்புகள் நிறைந்து உள்ளன.
இந்த நிலையில் வங்கியில் நேற்று முன்தினம் இரவு சிவலிங்கம் என்பவர் இரவு காவலாளியாக பணியில் இருந்தார். அப்போது நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. உடனே சிவலிங்கம் ஓடி சென்று பார்த்த போது அங்கு 2 பேர் எந்திரத்தை உடைத்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். 
மடக்கி பிடித்தனர்
பொதுமக்கள் வருவதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் அதில் ஒருவர் மரத்தில் ஏறுவதை பார்த்த பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். இதனையடுத்து அவருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். 
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 32) என்பதும், தப்பி ஓடியவர் கிருஷ்ணகிரி சிட்டாம்பட்டியை சேர்ந்த விஜய் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சக்திவேலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய விஜயை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்