கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்து வசதிகளும் தயார்

குமரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்து வசதிகளும் தயாராக இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

Update: 2021-08-10 21:17 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்து வசதிகளும் தயாராக இருப்பதாக  அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
குமாி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவல் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். முக்கியமாக குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான படுக்கை வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் தயாராக உள்ளது. குமரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’, என்றார்.
ஆக்சிஜன் உற்பத்தி மையம்
தொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 20 பேர் முதல் 30 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா 3-வது அலை பரவல் உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளது. மேலும் 3 தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் உரம் தயாரிக்கும் முயற்சி நடந்து வருகிறது. வீடுகளில் குழாய்கள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி, ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி முதல்வர் திருவாசகமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உரம் தயாரிக்கும் பணி
மேலும் நாகர்கோவில் ஹோலி கிராஸ் நகரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குழாய் மூலம் உரம் தயாரிக்கும் திட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர், நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.2.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழுக்கம்பாறையில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.

மேலும் செய்திகள்