பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
தஞ்சை பெரிய கோவிலில், ஆடிப்பூர விழாவையொட்டி, பெருவுடையார், பெரியநாயகி அம்மன் உள்பட, அனைத்து பரிவார தெய்வங்களுக்கும், நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தஞ்சாவூர்;
தஞ்சை பெரிய கோவிலில், ஆடிப்பூர விழாவையொட்டி, பெருவுடையார், பெரியநாயகி அம்மன் உள்பட, அனைத்து பரிவார தெய்வங்களுக்கும், நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தஞ்சை பெரியகோவில்
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திழ்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு நேற்று ஆடிப்பூரம் காலை 11.24 மணிக்கு தொடங்கியதால், பெருவுடையார், பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு, பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பெரியநாயகி அம்மனுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சிறப்பு அபிஷேகம்
அதனை தொடர்ந்து, கோவில் நுழைவுவாயிலில் உள்ள விநாயகர், ராகு, நால்வர், சொக்கநாதர், சப்தலிங்கங்கள், சப்தகன்னிமார்கள், நடராஜர், முருகன், வராகி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும், பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, கோவிலில் இன்று (புதன்கிழமை) பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.