பெங்களூருவில் ரூ.80 கோடி திமிங்கல கழிவு பறிமுதல்
பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.80 கோடி திமிங்கல கழிவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
திமிங்கல கழிவு
திமிங்கல கழிவு மருத்துவ துறையில் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் திமிங்கல கழிவை விற்க மத்திய அரசு தடை விதித்து உள்ளது. ஆனாலும் சிலர் திமிங்கல கழிவை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சட்டவிரோதமாக திமிங்கல கழிவை எடுத்து வந்து அதை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
பெங்களூரு பகலகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. அந்த வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் திமிங்கல கழிவை விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று அந்த நிறுவத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அந்த நிறுவனத்தில் திமிங்கல கழிவு, பழங்கால பொருட்கள், சிவப்பு பாதரசம் ஆகியவை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
ரூ.80 கோடி
இதையடுத்து அங்கு இருந்த 8 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். ஆனால் 3 பேர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி சென்றனர். 5 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராய்ச்சூரை சேர்ந்த மஜீப் பாஷா(வயது 48), முகமது முன்னா(40), குலாம்சந்த்(40), சந்தோஷ்(31), ஜெகநாத் சர்மா(40) என்பதும், தப்பி சென்றவர்கள் மஞ்சப்பா, ராஜூ, நரசிம்மமூர்த்தி என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 8 பேரும் சேர்ந்து சட்டவிரோதமாக திமிங்கல கழிவை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து 80 கிலோ திமிங்கல கழிவு, பழங்கால பொருட்கள், சிவப்பு பாதரசத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 80 கிலோ திமிங்கல கழிவின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.80 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. கைதான 5 பேர் மீதும் பகலகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ரூ.1 லட்சம் வெகுமதி
இந்த கும்பலை திறமையாக செயல்பட்டு கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்த கமல்பந்த், அவர்களுக்கு போலீசாருக்கு ரூ.1 லட்சம் வெகுமதியையும் அறிவித்துள்ளார்.