60 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம்: ஹாசன் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராக கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
60 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நாளை கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணை நடக்கிறது. இதனால் ஹாசன் மாவட்ட கலெக்டர் கிரீஷ், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் ஆஜராகும்படி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ஹாசன்:
60 குரங்குகள்...
ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா சவுடேனஹள்ளி கிராமம் அருகே கடந்த மாதம்(ஜூலை) 28-ந்தேதி 60-க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்து சாக்கு பைகளில் போட்டு மூச்சு திணறடித்து கொன்று வீசி எறியப்பட்டிருந்தது. இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. குரங்குகள் இறந்தது குறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குரங்குகளை கொன்றதாக பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வருகிற 12-ந்தேதி(நாளை) விசாரணைக்கு வருகிறது.
ஐகோர்ட்டு உத்தரவு
இந்த நிைலயில் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில், ஹாசனில் 60 குரங்குகள் கொன்ற வழக்கு வருகிற 12-ந்தேதி(நாளை) விசாரணைக்கு வருகிறது.
அதனால் ஹாசன் மாவட்ட கலெக்டர் கிரீஷ், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச கவுடா மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.