16-ந் தேதி முதல் கடையடைப்பு போராட்டம்; வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
கோரி்க்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி முதல் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நெல்லை:
பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்க பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத்தலைவர் சாலமோன் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் இசக்கி, துணைத்தலைவர்கள் சிராஜுதீன், காந்தி, நடராஜன், துணை செயலாளர்கள் கணேசன், சுந்தர், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் பெரியபெருமாள் வரவேற்று பேசினார்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் நவீனப்படுத்தும் பணியை தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள வியாபாரிகளுக்கு தற்காலிக கடைகள் அமைத்து கொடுக்க வேண்டும். ஜவகர் மைதானம், பழைய போலீஸ் குடியிருப்பு வளாகம் ஆகிய 2 இடங்களில் தற்காலிக மாற்று கடைகள் பொதுமக்கள் நலன் கருதி அமைத்துக் கொடுக்க முடியாவிட்டால் காந்தி மார்க்கெட் கடைகளை இடிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். குறிப்பிட்ட இடத்தை தரமுடியாமல், வேறு இடம் கொடுக்க மாநகராட்சி முயற்சி செய்வதை கண்டிக்கிறோம்.
வியாபாரிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் வருகிற 16-ந் தேதி முதல் காலவரையற்ற கடையடைப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும். கட்டுமான பணி முடிவடைந்த பிறகு தற்போது தொழில் செய்து வரும் அனைத்து வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும், என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் துணைச் செயலாளர் முஸ்தபா நன்றி கூறினார்.