சந்தையில் ஆடு வாங்க பொதுமக்கள் குவிந்தனர்

நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ஆடு வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2021-08-10 18:55 GMT
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடு வாங்க பொதுமக்கள் குவிந்தனர். அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

சந்தை

கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்ட பின்னரும் காய்கறி சந்தைகள், ஆடு, கோழி, மாடு விற்பனை செய்யக்கூடிய சந்தைகளை திறப்பதற்கு அனுமதி இல்லாமல் இருந்தது. தற்போது சந்தைகள் திறக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து விற்பனை நடைபெற்று வருகிறது.
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள கால்நடை சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி, மாடு மற்றும் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் விற்பனை செய்யப்படும். இந்த சந்தை கடந்த மாதம் 20-ந் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூட்டம்

ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆவணி மாதம் உள்ள வெள்ளிக்கிழமைகளில் சுடலை மாடசுவாமி, கருப்பசாமி உள்ளிட்ட காவல் தெய்வங்களின் கோவில் கொடை விழா நடைபெறும். இந்த கொடை விழாக்களில் ஆடு, கோழி பலியிடுவார்கள்.
இதற்காக ஆடு வாங்குவதற்கு மேலப்பாளையம் சந்தையில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சந்தைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதுதவிர மற்ற வகை ஆடுகளும் விற்பனைக்கு வந்தன. அந்த ஆடுகளை ஏராளமான பொதுமக்கள் வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக இருந்தது.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் நேற்று மேலப்பாளையம் சந்தையில் ஆயிரக்கணக்கானவர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் உள்ளதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் உதவி ஆணையாளர் சுகிபிரேமலா, உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது மற்றும் அதிகாரிகள் சந்தைக்கு சென்றனர். அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்த வியாபாரிகள், பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஒலிபெருக்கி மூலம் அறிவுரை

இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மேலப்பாளையம் போலீசார், கொரோனா விதிமுறைகளை பொதுமக்களும், வியாபாரிகளும் பின்பற்ற வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் பேசி அறிவுரை வழங்கினார்கள்.
மேலும் சந்தைக்கு செல்லும் நுழைவு வாசலில் போலீசார், பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு குறிப்பிட்ட இடைவெளியில் பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். இதேபோல் சந்தையை விட்டு வெளியேறும் வாசலிலும் சமூக இடைவெளியை கடைபிடித்து செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து சந்தையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்