2 கடைகளில் திடீரென தீப்பிடித்தது
விருதுநகர் மீன் மார்க்கெட்டில் 2 கடைகளில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்,
விருதுநகர் மீன் மார்க்கெட்டில் 2 கடைகளில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடைகள்
விருதுநகரில் தேசபந்து திடல் எதிரே மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. முன்பக்க நுழைவு வாயிலில் ராஜா என்பவருக்கு சொந்தமான மீன் கடையும், விஜயா என்பவரது காய்கறி கடையும் உள்ளது.
இந்த இரண்டு கடைகளின் மேற்கூரை தகரத்தாலான நிலையில் ஷட்டர் கதவுகள்அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக மீன் மார்க்கெட் பகல் நேரத்தில் செயல்படும் நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜா மற்றும் விஜயா ஆகியோர் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
தீ விபத்து
இந்நிலையில் நேற்று காலை இந்த இரு கடைகளிலும் திடீரென தீப்பிடித்தது. கடைகளிலிருந்து தீப்பிழம்பு மற்றும் புகை வெளியே வந்த நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய தீயணைப்பு அதிகாரி மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீயணைப்பு படையினரின் துரித நடவடிக்கையால் அருகில் உள்ள கடைகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. கடைகளில் மின்கசிவால் தீப்பிடிக்க வாய்ப்பு இல்லை என கருதப்படுவதால் தீ பிடித்ததற்கான காரணம் பற்றி மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.