நாமகிரிபேட்டையில் ரூ.90 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் 2,100 மஞ்சள் மூட்டைகள் ரூ.90 லட்சத்துக்கு ஏலம் போனது.
ராசிபுரம்:
மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பேளுக்குறிச்சி, அரியாக்கவுண்டம்பட்டி, ஆத்தூர், ஊனத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
சேலம், ஈரோடு, நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இதில் கலந்து கொண்டு மஞ்சளை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
ரூ.90 லட்சம்
இதில் விரலி ரகம் 1,600 மூட்டைகளும், உருண்டை ரகம் 430 மூட்டைகளும், பனங்காலி ரகம் 70 மூட்டைகளும் ஏலம் விடப்பட்டன. விரலி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 332 முதல் அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 749-க்கும், உருண்டை ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 112 முதல் அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 12-க்கும், பனங்காலி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரத்து 402 முதல் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்து 689-க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 2 ஆயிரத்து 100 மூட்டை மஞ்சள் ரூ.90 லட்சத்துக்கு ஏலம் போனது.