கூடலூர்
மசினகுடி அருகே மின்வேலியில் சிக்கி கரடி பலியானது. இது தொடர்பாக முதியவரை பிடித்து விசாரணை நடந்து வருகிறது.
கரடி பலி
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது தனியார் பட்டா நிலத்தில் கரடி ஒன்று உயிரிழந்து கிடப்பதை கண்டனர்.
உடனே அவர்கள் அங்கு ஆய்வு செய்தபோது மின்வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் விசாரணை
இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர் காந்தன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அந்த நிலத்தை கண்காணித்து வரும் ராமசாமி (வயது 86) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் வனவிலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க மின்வேலி அமைத்து இருந்ததும், அதில் சிக்கி கரடி பலியானதும் தெரிய வந்தது.
பின்னர் முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் வரவழைக்கப்பட்டு கரடியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மின்சாரம் பாய்ந்து கரடி இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிங்கார வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.