தனித்தனி விபத்து 3 பேர் பலி

திண்டிவனம் பகுதியில் நடந்த தனித்தனி விபத்தில் 3 பேர் பலியானார்கள். டாக்டர் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

Update: 2021-08-10 17:16 GMT
திண்டிவனம், 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நாடியம்மாள்புரத்தை சேர்ந்தவர் மேகநாதன்(வயது 61). இவரது மனைவி மங்கையர்கரசி(56). இவர்களது மகன் பன்னீர்செல்வம்(28), மகள் பிரதினா(27). டாக்டர். இவரது திருமணத்திற்காக நகை வாங்குவதற்காக 4 பேரும் நேற்று சென்னைக்கு காரில் புறப்பட்டனர். காரை பன்னீர்செல்வம் ஓட்டினார். திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமத்தில் சென்றபோது, மொபட்டில் சாலையை கடந்த அதே கிராமத்தை சேர்ந்த டீக்கடை உரிமையாள ஆறுமுகம்(62) மீது கார் மோதியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியானார். 
மேலும் பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டை இழந்து கார், சாலையில் உள்ள நடு கட்டையில் மோதி எதிர் திசையில் பாய்ந்து, சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த கார் மீது மோதியது. இதில் 2 கார்களும் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தன. இந்த விபத்தில் மேகநாதன், மங்கயைர்கரசி, பிரதினா, சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த காரில் பயணம் செய்த சென்னை பூந்தமல்லி அடுத்த திருமழிசையை சேர்ந்த மகா மகன் சரவணன்(28), செஞ்சி தாலுகா மேல்சித்தாமூர் மாதாக்கோவில் தெருவை சேர்ந்த அகஸ்டின் மகன் அந்தோணிராஜ்(36) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விவசாயி பலி 

திண்டிவனம் அருகே உள்ள வெண்மணியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(60). விவசாயி. இவர் சைக்கிளில் திண்டிவனம்-செஞ்சி சாலையில்  திருவள்ளூர் நகர் அருகில் சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் ஜெயராமன் பலியானார். இது தொடர்பாக ரோஷனண போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வாலிபர் சாவு 

வானூர் அருகே உள்ள பேராவூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் மகன் அரவிந்த்(18). இவர் திண்டிவனத்தில் எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று சலவாதி ரெயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி, 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அரவிந்த் பலியானார். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்