13 ஆயிரம் கிராமங்களில் தீவிர களப்பணியாற்றுங்கள்

கொரோனாவை முழுமையாக ஒழிக்க 13 ஆயிரம் கிராமங்களில் தீவிர களப்பணியாற்றுங்கள் என்று திண்டிவனத்தில் நடந்த பா.ஜ.க. முகாமில் அண்ணாமலை பேசினார்.

Update: 2021-08-10 17:13 GMT
திண்டிவனம், 

திண்டிவனத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். 
முகாமில் மாநில பொதுச்செயலாளர் கே.டி‌.ராகவன், நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கருநாகராஜன், கார்வேந்தன், கலிவரதன், தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
முகாமில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- 
கொரோனா தன்னார்வலர் குழுவிற்கு மாவட்டத்திற்கு 4 பேர் என்ற விகிதத்தில் 60 மாவட்டங்களைச் சேர்ந்த 240 பேர் வந்து இருக்கிறீர்கள். மத்திய அரசோடு இணைந்து கொரோனாவை இந்தியாவை விட்டு விரட்ட பாடுபட வேண்டும். கிராம மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது, உணவு பழக்கவழக்கங்கள், யோகா உள்ளிட்டவைகள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். 

இலக்குடன் செயல்படுங்கள் 

மாவட்ட, மண்டல அளவில் 4 பேர் கொண்ட குழுவில் ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனாவை முழுமையாக ஒழிக்க அடுத்த 6 மாதத்தில் தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமங்களில் தீவிர களப்பணியாற்ற வேண்டும். இதற்காக ஒரு வாரத்தில் கிராமங்கள் தோறும் 2 தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் கொரோனா இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுங்கள். 
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்