அனைத்து பள்ளிகளையும் ஒரு வாரத்திற்குள் கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஒரு வாரத்திற்குள் கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளான 189 மேல்நிலைப்பள்ளிகள், 174 உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்த பள்ளிகளை கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி திறப்பது குறித்தும், மாணவ- மாணவிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்வது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கலெக்டர் ஆய்வு
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் டி.மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வகுப்பறை, கழிவறை சுகாதாரமான முறையில் இருக்கிறதா என்று பார்வையிட்ட அவர், போதிய இடவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளையும் ஒரு வார காலத்திற்குள் கிருமி நாசினியால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும், அதே நேரத்தில் மாணவ- மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித்தர வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன், தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா ஆகியோர் உடனிருந்தனர்.