திருவண்ணாமலையில் கொரோனா விதிகளை பின்பற்றாத 52 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
திருவண்ணாமலை நகராட்சியில் கொரோனா விதிகளை பின்பற்றாத 52 நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.;
திருவண்ணாமலை
திருவண்ணாமலை நகராட்சியில் கொரோனா விதிகளை பின்பற்றாத 52 நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
5 குழுக்கள் அமைப்பு
தமிழத்தில் கொரோனா 3-வது அலை ஏற்படுவதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் பல்வேறு நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக நிற்பதும், முகக்கவசம் அணியாமல் இருப்பதும் போன்ற தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் உள்ளதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
அதன்படி, நகராட்சி கமிஷனர் சந்திரா தலைமையில் இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள 5 குழுக்கள் அமைக்கப்பட்டன.
ரூ.15 ஆயிரம் அபராதம்
இக்குழுவினர் போலீசாரின் உதவியோடு நேற்று போளூர் ரோடு, கொச தெரு, பெரிய தெரு, பஸ் நிலையம் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைகளில் கிருமி நாசினி வைக்காமல் இருந்தது, முகக்கவசம் அணியாமல் இருந்தது போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததாக 52 நிறுவனங்கள் கண்டறியப்பட்டது. அந்த நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். அதிக அளவிலான மக்கள் கடைகளில் கூடினால் அந்த நிறுவனம் மூடி ‘சீல்’ வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.