தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு
தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு
கோவை
கோவை கிராஸ்கட் ரோடு குறுக்கு வீதிகளில் இருபுறமும் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
10 குறுக்கு வீதிகள்
கோவையில் தனி நபர் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதில், கோவை டவுன்ஹால் மற்றும் காந்திபுரத்தில் பஸ் நிலையங்கள், வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளன.
காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் 10 குறுக்கு வீதிகள் உள்ளன. இந்த வீதிகள் வழியாக கிராஸ்கட் ரோட்டில் இருந்து 100 அடி ரோடுக்கு செல்ல முடியும்.
ஆனால் அனைத்து குறுக்கு வீதிகளிலும் ஜவுளி, செல்போன், கணினி உள்பட வணிக நிறுவனங்கள், கடைகள் அதிகம் உள்ளன.
இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை குறுக்கு வீதிகளில் இருபுறமும் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இதற்கு அங்குள்ள கடைகளுக்கு என்று வாகன நிறுத்தும் இடம் ஏதும் இல்லை என்பதே முக்கிய காரணம் ஆகும்.
வியாபாரிகள் பாதிப்பு
குறுக்கு வீதிகளில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சில நேரங்களில் கார் போன்ற சிறிய வாகனங்கள் பாதி தூரம் சென்று விட்டு திரும்பி வேறு குறுக்கு ரோடுகள் வழியாக திரும்பி செல்லும் நிலை உள்ளது.
இதன் காரணமாக வாகன ஓட்டுனர்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே பன்னடுக்கு வாகன நிறுத்தும் இடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அதற்கான பணிகள் ஏதும் தொடங்கப்பட வில்லை.
எனவே கிராஸ்கட் குறுக்கு வீதிகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கருத்துக்கேட்பு கூட்டம்
இது குறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் நிர்வாகி லோகு கூறுகையில், கிராஸ்கட் ரோடு குறுக்கு வீதிகள் 10 அடி அகலமே உள்ளன. இதில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் 4 அடி இடமே இருக்கிறது.
இதனால் தான் அடிக்கடி நெரிசல், வாகனங்களை நிறுத்துவதில் தகராறு ஏற்படுகிறது. எனவே கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
10 ஆயிரம் சதுரடிக்கு மேலுள்ள கட்டிடங்களில் வாகன நிறுத்துமிட வசதி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
90 சதவீத பணிகள் நிறைவு
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது
ஆர்.எஸ்.புரத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டன. அதன் சாதக, பாதங்களை மதிப்பீடு செய்த பிறகு காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் பன்னடுக்கு வாகன நிறுத்த திட்டம் தொடங்கப்படும்.
வாகன நிறுத்தம் அமைப்பது தொடர்பாக ஒருசில தனியார் அமைப்புகளுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உள்ளது. விரைவில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
500 பேருக்கு அபராதம்
இது குறித்து போக்குவரத்து துணை கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில், நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தியதாக தினசரி 500 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
பெங்களூருவை போல் சாலையோர கட்டணம் வாகன நிறுத்தம் திட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் ஒரு புறம் மட்டும் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.