தேவதானப்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
தேவதானப்பட்டி அருகே மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.;
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சந்தோஷ்குமார் மது குடித்துவிட்டு வந்து, வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அன்னலட்சுமி கோபித்துக்கொண்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷத்தை குடித்தார்.
இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் இறந்தார். இந்த தற்கொலை குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.