தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.6 கோடி செலவில் மின்விளக்குகள் அமைத்த நடவடிக்கை அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.6 கோடி செலவில் மின்விளக்குகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.6 கோடி செலவில் மின்விளக்குகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலிடம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் "உங்கள் தொகுதியில் முதல்வர்" என்னும் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் சென்று சேரும் வகையில் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 72 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மனுதாரர்களுக்கு பலன் கிடைத்து உள்ளது. அத்தனை மனுக்களும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளது.
ரூ.6 கோடி
ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மற்றும் மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. வரும் மழைக்காலத்துக்கு முன்பு அந்த பணிகளை முடித்து விட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே இவை அனைத்தையும் செய்து உள்ளோம்.
தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகள் உள்பட பல இடங்களில் மின்விளக்குகள் இல்லை. இதனால் ரூ.6 கோடி செலவில் தெருவிளக்குகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
லஞ்ச ஒழிப்பு சோதனை
தமிழக முன்னாள் அமைச்சர்கள் அனைவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறவில்லை. யார் மீது ஊழல் புகார் போலீசில் தரப்பட்டுள்ளதோ, அவர்கள் மீது போலீசார் முறையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது எதுவும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.