காஞ்சீபுரத்தில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது - வீட்டில் இருந்த ரூ.15½ லட்சமும் சிக்கியது
காஞ்சீபுரத்தில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.15½ லட்சமும் சிக்கியது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் இணை சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நில விற்பனை, பவர் உள்ளிட்ட பத்திரப்பதிவுகளை பதிவு செய்வதற்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர். இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் துலுக்காந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த பாலு என்பவர் தனது அங்கீகரிக்கப்படாத 2,107 சதுர அடி நிலத்தை முறைப்படுத்தி வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கவும் மற்றும் அவரது மற்றொரு 38 செண்ட் நிலத்திற்கான சரியான முத்திரை மதிப்பீட்டினை நிர்ணயம் செய்வதற்காகவும் இணை சார்பதிவாளர் அலுவலகம் வந்தார்.
அப்போது அங்கு இணை சார் பதிவாளராக பணிபுரிந்து வரும் சீனிவாசன் என்பவர் நில மதிப்பீட்டினை மாவட்ட பதிவாளருக்கு பரிந்துரை செய்வதற்காக ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.ஆனால் லஞ்சம் கொடுக்க மறுத்த பாலு இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
அதனடிப்படையில் போலீசார் அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரம் நோட்டுகளை சீனிவாசனிடம் கொடுக்குமாறு பாலுவிடம் கொடுத்து அனுப்பினர். அதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு வே.கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் அங்கு மறைந்து இருந்து கண்காணித்தனர்.
அப்போது சீனிவாசன் தனிப்பட்ட முறையில் உதவியாளராக வேலையில் அமர்த்தியுள்ள பன்னீர்செல்வத்திடம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்த போது, பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் புகுந்து சீனிவாசன், மற்றும் பன்னீர்செல்வத்தை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவர் லஞ்சமாக பெற்ற ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, சென்னை அண்ணாநகர் நேரு நகரில் அமைந்துள்ள சீனிவாசனின் வீட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதித்தபோது, கணக்கில் காட்டாத ரூ.15½ லட்சம் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக சார்பதிவாளர் சீனிவாசன் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த அவரது உதவியாளர் பன்னீர்செல்வம் (61) ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.