ஊராட்சிமன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து அகற்றியதாக கூறி கொட்டையூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் அவர்கள் புகார் மனு ஒன்றை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொட்டையூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் எந்த பழுதும் இல்லாமல் நல்ல நிலையில் செயல்பட்டு வந்தது. இந்த அங்கன்வாடி கட்டிடம் அரசு அனுமதி இன்றி எந்த ஒரு முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் கடந்த ஜனவரி மாதம் அவசர அவசரமாக இடிக்கப்பட்டது.
மேலும் இடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தில் இருந்த இரும்பு கம்பிகள், கதவுகள், ஜன்னல், சிமெண்டு ஓடுகள், குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் அதில் உள்ள மற்ற பொருட்களையும் ஊராட்சி மன்ற தலைவர் யுவராஜ் தனது சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்திக்கொண்டார்.
தற்போது அங்கன்வாடி கட்டிடம் இடிக்கப்பட்டு 7 மாதங்கள் ஆகிறது. அதில் உள்ள உணவுப் பொருட்கள் அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. எனவே அனுமதி இல்லாமல் அங்கன்வாடி கட்டிடத்தை இடித்தது குறித்து கேட்கும்போது பொதுமக்களை ஊராட்சிமன்ற தலைவர் மிரட்டுகிறார்.
எனவே கொட்டையூர் ஊராட்சியில் நல்ல நிலையில் இருந்த அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து அதில் இருந்த பொருட்களை தன்னிச்சையாக எடுத்து பயன்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.