சென்னை சிறுமி பலியான சம்பவம்: குளிர்பான தொழிற்சாலைக்கு ‘சீல்’
சென்னையில் குளிர்பானம் குடித்து சிறுமி பலியானதாக புகார் கூறப்பட்ட நிலையில் குளிர்பான தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொன்னேரி,
சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், அஸ்வினி, தரணி (வயது 13) என்ற 2 மகள்களும் உள்ளனர். சதீஷ், பெசன்ட் நகர் கடற்கரையில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 4-ந் தேதி மாலை தரணி, அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த சிறுமிக்கு சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அப்போது அவரது உடல் நீல நிறமாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி தரணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார், பலியான சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்புக்கான காரணம் குறித்து தெரிய வரும் எனவும், சிறுமி குடித்த குளிர்பானத்தை ஆய்வுக்காக அனுப்பி வைத்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவின்பேரில், சிறுமி குடித்த குளிர்பானம் தயாரிக்கப்படும் தொழிற்சாலை எங்குள்ளது? என்பது குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை விசாரணையில் இறங்கியது. இந்த குளிர்பானம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தில் தயாரிக்கப்படுவது தெரியவந்தது.
அந்த தனியார் குளிர்பான தொழிற்சாலையில் பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. செல்வம் உடனடியாக சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும், அவரது தகவலின்பேரில் அங்கு வந்த திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ்சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிறுமி குடித்த குளிர்பானம் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு அதன் தரம் குறித்த முடிவு தெரியும்வரை இந்த குளிர்பான தொழிற்சாலையை தற்காலிகமாக மூடும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் ஆகியோரின் ஆய்வு அறிக்கைகளை தமிழக அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் துறை கமிஷனருக்கு அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு கமிஷனர் டாக்டர்.செந்தில்குமார் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள தனியார் குளிர்பான தயாரிப்பு தொழிற்சாலைக்கு உணவு பாதுகாப்பு சட்டம் 2006-ன் படி சீல் வைக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் ஆகியோர் குளிர்பான தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.