கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் பூசாரி திடீர் தர்ணா

கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பூசாரி திடீரென தர்ணா போராட்டம் நடத்தினார்.;

Update: 2021-08-09 22:56 GMT
சேலம்:
சேலம் அருகே தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 44). அப்பகுதியில் உள்ள முருகன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். பின்னர் அவர், கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து பூசாரி சுப்பிரமணியை அங்கிருந்த போலீசார் சமாதானப்படுத்தி விசாரித்தனர். பிறகு அவர் கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து மனு கொடுத்தார்.
இதுகுறித்து பூசாரி சுப்பிரமணி கூறும்போது, தம்மநாயக்கன்பட்டியில் முருகன் கோவிலில் பூசாரியாக இருந்தேன். அந்த கோவிலுக்கு செல்லும் பாதை 750 சதுரடி நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் கோவில் நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் வராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்