சேலத்தில் செல்போன் தகராறில் பள்ளி மாணவி தற்கொலை
சேலத்தில் செல்போன் தகராறில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலத்தில் செல்போன் தகராறில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி மாணவி
சேலம் அஸ்தம்பட்டியை அடுத்த சின்னபுதூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மகள் தனுசியாஸ்ரீ (வயது 14). இவர் அங்கு உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் மாணவி நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
இது குறித்து கார்த்திகேயன் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
செல்போன் தகராறு
இது குறித்து போலீசார் கூறும் போது, தற்போது கொரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி தனுசியாஸ்ரீ வீட்டில் செல்போன் மூலம் ஆன்லைனில் பாடம் படித்து கொண்டு இருந்தாள்.
அப்போது அவளிடம் இருந்த செல்போனை அவரது தம்பி தனுஷ்வர்மா கேட்டு உள்ளான். அதற்கு மாணவி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அக்காள், தம்பிக்கு இடையே செல்போனுக்காக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனம் உடைந்த மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக தெரிகிறது. இருப்பினும் மாணவி தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.