சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுப்பதாகக்கூறி தொழிலாளி தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுப்பதாகக்கூறி தொழிலாளி தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயற்சி
மேச்சேரி அருகே உள்ள நங்கவள்ளி வாணியர் தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 41). நெசவு தொழிலாளி. இவருடைய தாய் பார்வதி (70), தம்பி பாபு. இவர்கள் 3 பேரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் கார் நிற்கும் இடம் அருகில் சென்று திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுத்து நிறுத்தி கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர். அப்போது, ஞானவேலின் தாய் பார்வதி கதறி அழுதபடி தரையில் படுத்து கூச்சலிட்டார். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, எங்களது நிலத்தை ஒருவர் அபகரிப்பு செய்ய முயற்சி செய்வதாகவும், எனவே, எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதையடுத்து ஞானவேல் உள்ளிட்ட 3 பேரிடம் டவுன் போலீசார் விசாரித்தனர். இது குறித்து நெசவு தொழிலாளி ஞானவேல் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
நங்கவள்ளியில் எங்களுக்கு சொந்தமான 3 சென்ட் நிலம் உள்ளது. எங்களது வீட்டையும், அதற்கான வழித்தடத்தையும் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வாழவிடாமல் தினமும் தொந்தரவு செய்து வருகிறார்கள். கொரோனா காலகட்டத்திலும் தொழிலை இழந்து வருமானம் இல்லாமல் பிழைப்பு நடத்தி வருகிறோம். ஆனால் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது ஏற்கனவே மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர்களிடம் புகார் மனு அளித்தோம்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். அரசியல் கட்சி நிர்வாகி என்பதால் நிலத்தை அளவீடு செய்வதற்கு அதிகாரிகள் வர மறுக்கிறார்கள். எனவே, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.