வாடகை கொடுக்காததால் நகையை பறித்து வெளியேற்றம்: சேலத்தில் பேரனுடன் மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

வாடகை கொடுக்காததால் நகையை பறித்து கொண்டு வீட்டின் உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக கூறி, சேலத்தில் பேரனுடன் மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-09 22:02 GMT
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் பச்சப்பட்டியை சேர்ந்தவர் சேஷம்மாள் (வயது 97). இவருடைய பேரன் சுரேஷ்பாபு (32). இவர்கள் இருவரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மூதாட்டி சேஷம்மாள் திடீரென அங்கு நிறுத்தப்பட்டிருந்த கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் பேரன் சுரேஷ்பாபுவும் இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு வந்து 2 பேரிடமும் விசாரித்தனர். அதற்கு வீட்டு வாடகை கொடுக்காததால் வீட்டின் உரிமையாளரின் குடும்பத்தினர் நகையை பறித்துவிட்டு தங்களை வெளியே துரத்திவிட்டதாகவும், இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினர். இதுகுறித்து சுரேஷ்பாபு கூறியதாவது:-
சேலம் பச்சப்பட்டியில் வாடகை வீட்டில் பாட்டியுடன் வசித்து வருகிறேன். சேலத்தில் உள்ள ஒரு வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தேன். கொரோனா ஊரடங்கால் கடந்த 10 மாதங்களாக வேலைக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன். 8 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. இதனால் வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். இந்த நிலையில் பாட்டி வீட்டில் இருந்தபோது, அவரது தோடு உள்ளிட்ட 9 கிராம் தங்கத்தை வீட்டின் உரிமையாளர் பறித்துக்கொண்டார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, அவர்களது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே துரத்திவிட்டனர். இதனால் வயதான பாட்டியுடன் நான் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறேன். வீட்டிற்குள் உள்ள பொருட்களை கூட எடுக்க முடியவில்லை. இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நகையை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே துரத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்