புதிய மீன்வள மசோதாவை எதிர்த்து மீனவர்கள் வேலை நிறுத்தம்
மத்திய அரசின் புதிய மீன்வள மசோதாவை எதிர்த்து கன்னியாகுமரி, குளச்சலில் மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி:
மத்திய அரசின் புதிய மீன்வள மசோதாவை எதிர்த்து கன்னியாகுமரி, குளச்சலில் மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு
மத்திய அரசின் புதிய மீன்வள மசோதா மீனவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளதாக மீனவர்கள் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு பேரவை துணை தலைவர் நாஞ்சில் மைக்கேல் தலைமையில் நடந்தது. திருத்தல பங்குதந்தை ஆன்றனி அல்காந்தர், விசைப்படகு உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 9-ந் தேதி (அதாவது நேற்று) மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலை நிறுத்தம்
அதன்படி நேற்று மத்திய அரசின் புதிய மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த மசோதாவை கைவிடக்கோரியும் கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி சின்ன முட்டத்தை தங்கு தளமாக கொண்டு சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து படகுகளில் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
இதேபோல் கோவளம், வாவத் துறையை சேர்ந்த வள்ளம் மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.
போராட்டம்
அதே சமயத்தில் கோவளத்தை சேர்ந்த மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் முன்பு திரண்டனர். அவர்கள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி மீன்வள மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தையொட்டி கன்னியாகுமரி சுற்றுவட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
குளச்சல்
இதே கோரிக்கையை வலியுறுத்தி குளச்சல் விசைப்படகினர் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். மீன்பிடித்துறைமுகம் மற்றும் விசைப்படகுகளில் கருப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து புனித காணிக்கை அன்னை திருத்தலம் வளாகத்தில் பங்குத்தந்தை மரிய செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடந்தது. மறை வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ் முன்னிலை வகித்தார். இணை பங்குத்தந்தையர்கள் வில்சன், ரெக்வின், ஊர் செயலாளர் வால்டர், துணைச்செயலாளர் ரெக்சன், பொருளாளர் ஜெயசீலன் உள்பட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.