வீடு புகுந்து செல்போன் திருட்டு
ஒரத்தநாட்டில் வீடு புகுந்து செல்போனை திருடிய குடுகுடுப்பைக்காரரை போலீசார் கைது செய்தனர்
ஒரத்தநாடு, ஆக.10 -
ஒரத்தநாட்டில் வீடு புகுந்து செல்போனை திருடிய குடுகுடுப்பைக்காரரை போலீசார் கைது செய்தனர்
செல்போன் திருட்டு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு டவுன் தெலுங்குத்தெருவை சேர்ந்தவர் பிரவீண்குமார் (வயது29). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முகப்பு பகுதியில் தனது செல்போனை சார்ஜ் போட்டு விட்டு வீட்டுக்குள் சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் வேகமாக பிரவீண்குமார் வீட்டுக்குள் புகுந்து பிரவீண்குமாரின் செல்போனை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்து ஒரத்தநாடு போலீசில் ஒப்படைத்தனர்.
குடுகுடுப்பைக்காரர் கைது
பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இவர் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சேகர் (வயது25) என்பதும், இவர் ஜோதிடம் கூறும் குடுகுடுப்பைக்காரர் என்றும் தெரியவந்தது. இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து குடுகுடுப்பைக்காரர் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.