கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி
தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே நாளில் 3 பேர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 3 பேரையும் போலீசார் சமரசப்படுத்தி அனுப்பினர்.
தீக்குளிக்க முயற்சி
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு கொடுக்க வந்தனர்.
அப்போது அங்கு வந்த கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த தனம் என்ற பெண் திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணெயை தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தனக்கும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணமாகி விவாகரத்து ஆனது. அப்போது கோர்ட்டில் கணவர், மனைவிக்கு பணம் தர உத்தரவிடப்பட்டது. ஆனால் பணம் தராததால் அவர் மீது வழக்கு தொடர்ந்து, நிலத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜப்தி செய்ய தகவல் கூற போலீசார் சென்றபோது போலீசார் முன்னிலையில் அவர் என்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலும், தனக்கும் 2 குழந்தைகளுக்கும் வாழ்வாதாரம் பறிபோனதாலும், இந்த முடிவை எடுத்ததாக, அவர் கூறினார்.
மோசடி
சிறிதுநேரத்திற்கு பின்னர் கலெக்டர் அலுவலகம் வந்த, ஆலங்குளம் தாலுகா துத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரையும் போலீசார் தடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது நிலத்தை ஆலங்குளம், செங்கோட்டை, வீ.கே.புதூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த 5 பேர் அபகரித்துக் கொண்டதாகவும், பின்னர் நிலத்தை விற்பனை செய்து பத்திரம் எழுதியபோது பணம் தருவதாக கூறி ஏமாற்றி மோசடி செய்ததாகவும், கூறினார்.
தனக்கு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கதறி அழுதார்.
நிலம் ஆக்கிரமிப்பு
இந்த பரபரப்பு அடங்கிய சிறிதுநேரத்தில் குற்றாலம் அருகே உள்ள வல்லம் முதலாளிகுடியிருப்பு என்ற பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவர் தனது தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது தந்தைக்கு ஆதிதிராவிட நலத்துறையில் இருந்து இலவசமாக கொடுத்த வீட்டுமனையை ஒருவர் ஆக்கிரமித்துக்கொண்டு தகராறு செய்கிறார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என்றார்.
இவர்கள் 3 பேரிடமும் கோரிக்கை மனுக்களை வாங்கிய போலீசார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர். பின்னர் அவர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் 3 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.