நாய், மாடு, ஆடு வளர்த்தால் வரி - மாநகராட்சி புதிய அறிவிப்பு
இறைச்சி-மீன் கடைகளுக்கு புதிதாக உரிமம் வரி விதிக்கப்படுகிறது. அதே போல் வீடுகளில் நாய், மாடு, ஆடு வளர்த்தால் இனி வரி செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
மதுரை,ஆக.
இறைச்சி-மீன் கடைகளுக்கு புதிதாக உரிமம் வரி விதிக்கப்படுகிறது. அதே போல் வீடுகளில் நாய், மாடு, ஆடு வளர்த்தால் இனி வரி செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
சதுர அடிக்கு ரூ.10
மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மாநகராட்சியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி மாநகரில் இயங்கும் இறைச்சி-மீன் கடைகளை ஒழுங்குபடுத்தவும், அங்கு சுகாதார முறையில் இறைச்சி-மீன்களை விற்பனை செய்வதை உறுதி செய்யவும் அவர்களுக்கு புதிய லைசென்சு முறையை அமல்படுத்தி இருக்கிறார். தற்போதைய நிலையில் மாநகராட்சி பகுதியில் தொழில் புரிபவர்களுக்கு தொழில் உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த உரிமத்தை இறைச்சி-மீன் கடைகள் பெறுவதில்லை. அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு சாலைகள் மற்றும் வாய்கால்களில் கழிவுகளை கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதே போல் இறைச்சியில் கலப்படம் மற்றும் மீன்களில் ரசாயனம் கலப்பது என பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுகின்றன. எனவே இறைச்சி-மீன் கடைகளை ஒழுங்குப்படுத்த மாநகராட்சி உரிமம் (லைசென்சு) வழங்க முடிவு செய்து உள்ளது.
அதன்படி மாநகரில் இறைச்சி-மீன் கடை வைத்திருப்பவர்கள் இனி மாநகராட்சியிடம் இருந்து உரிமம் பெற வேண்டும். இதற்கு அந்த கடைகளின் அளவுக்கு சதுர அடிக்கு ஆண்டுக்கு ரூ.10 என கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். உதாரணமாக ஒரு கடை 200 சதுர அடி என்றால் சதுரடிக்கு ரூ.10 வீதம் மொத்தம் அந்த கடைக்கு ரூ.2 ஆயிரம் உரிமத்தொகையினை ஆண்டுதோறும் செலுத்த வேண்டும்.
தீர்மானம்
இந்த உரிமம் பெறாதவர்கள் இனி மாநகராட்சி பகுதிகளில் இறைச்சி-மீன் விற்பனை செய்யக்கூடாது. அதே போல் சாலைகளில் மீன் -இறைச்சி வியாபாரம் செய்ய முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. அவர்களுக்கு இந்த லைசென்சும் வழங்கப்பட மாட்டாது. அதே போல் மாநகராட்சியின் வதை கூடங்களில் மட்டுமே இனி இறைச்சிகளை வதை செய்ய வேண்டும். கடைகளில் வைத்து ஆடு உள்ளிட்ட இறைச்சிகளை வதம் செய்து விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கழிவு நீர் வாய்க்கால்களில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
நாய், ஆடு, மாட்டுக்கு வரி
அதே போல் இனி வீடுகளில் நாய், மாடு, ஆடு, குதிரை வளர்த்தால் அதற்கு மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.10 வரி செலுத்த வேண்டும். இந்த வரியை செலுத்தி தங்களது வளர்ப்பு பிராணிகளை மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். இந்த வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதே போல் மாடு, ஆடு, குதிரைகளை சாலைகளில் விட்டால் அதற்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு, தினமும் அதன் பராமரிப்புக்கு ரூ.100 வசூலிக்கப்படும்.
அதே போல் சாலைகளில் வீட்டு நாய்கள் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய நடைமுறைகள் தொடர்பாக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதும் ஆட்சேபனைகள் இருந்தால் மாநகராட்சி நகர் நல அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.