கன்னட சினிமா படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கி தமிழக சண்டை கலைஞர் சாவு
ராமநகரில் கன்னட சினிமா படப்பிடிப்பின்போது மின்சாரம் தாக்கி தமிழகத்தை சேர்ந்த சண்டை கலைஞர் உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக இயக்குனர் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரு:
லவ் யூ ரச்சு படம்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜய் ராவ். இவர், தற்போது லவ் யூ ரச்சு என்ற கன்னட படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜய் ராவுக்கு ஜோடியாக, நடிகை ரஷிதா ராம் நடித்து வருகிறார். அந்த படத்தை தயாரிப்பாளர் குரு தேஷ்பாண்டே தயாரிக்கிறார். லவ் யூ ரச்சு படத்தின் இயக்குனராக சங்கர் ராஜ் உள்ளார். அந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நிறைவு பெற்றிருந்தது.
கொரோனா காரணமாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக ராமநகர் மாவட்டம் பிடதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜோகனபாளையா கிராமத்தில் புட்டராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் அந்த படத்தின் முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாட்டை சேர்ந்தவர்
அதன்படி, நேற்றும் அந்த தோட்டத்தில் வைத்து சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு நடந்தது. இதில், நடிகர் அஜய் ராவ், இயக்குனர் சங்கர் ராஜ் கலந்து கொண்டு இருந்தனர். சண்டை காட்சிகள் என்பதால், சண்டை ஸ்டண்ட் கலைஞர்களும், சண்டை பயிற்சியாளரும் கலந்து கொண்டு இருந்தார்கள். அதன்படி, சண்டை கலைஞராக (ஸ்டண்ட்) தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவரும், பெங்களூருவில் பல ஆண்டுகளாக வசித்து வந்தவருமான விவேக் (வயது 28) என்பவர் இருந்தார்.
இவருடன் ரஞ்சித் என்ற சண்டை கலைஞரும் இருந்தார். நடிகர் அஜய் ராவ் சம்பந்தப்பட்ட சண்டை காட்சி படமாக்கப்பட்டதும், சண்டை கலைஞர்களான விவேக், ரஞ்சித் கலந்து கொண்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்கான சண்டை பயிற்சியாளராக (ஸ்டண்ட் மாஸ்டர்) வினோத் செயல்பட்டு இருந்தார். கிரேன் வாகனம் மூலமாக விவேக், ரஞ்சித்தை தரையில் இருந்து மேலே தூக்குவது போன்ற சண்டை காட்சி படமாக்கப்பட்டது.
மின்சாரம் தாக்கி சாவு
அப்போது, கிரேன் வாகனம் மூலம் விவேக் உடலில் கட்டப்பட்டு இருந்த கயிற்றால், மேலே தூக்கப்பட்டார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் விவேக், ரஞ்சித்தின் உடல்கள் பட்டதாக தெரிகிறது. இதனால் 2 பேரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. இதன் காரணமாக விவேக்கும், ரஞ்சித்தும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். உடனடியாக அவர்கள் 2 பேரும், பெங்களூரு ராஜராஜேசுவரிநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விவேக் பரிதாபமாக இறந்து விட்டார். ரஞ்சித்திற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி பிடதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கு சென்று விவேக் உடலை கைப்பற்றியும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அலட்சியம் காரணம்
அப்போது லவ் யூ ரச்சு படத்தின் படப்பிடிப்பு பிடதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 5 நாட்களாக நடந்தும் போலீசாரிடம் எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அந்த தோட்டத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக விவேக், ரஞ்சித்தை கிரேன் வாகனம் மூலமாக மேலே தூக்கிய போது, அந்த வாகனம் சேற்றில் சிக்கி கொண்டதாகவும், இதனால் வேகமாக கிரேன் வாகனத்தை இயக்கியதால், உயர் அழுத்த மின்சார கம்பியில் 2 பேரின் உடலும் பட்டு மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் விவேக், ரஞ்சித் உடலில் இரும்பால் ஆன கயிற்றை கட்டி இருந்ததாகவும், அந்த இரும்பு கயிறு மின்சார கம்பியில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து அவர் உயிர் இழந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், உயர் அழுத்த மின்சார கம்பிகள் தோட்டத்தில் செல்வது பற்றி அறிந்தும், இயக்குனரும், சண்டை பயிற்சியாளரும் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமலும் அப்பகுதியில் வைத்து சண்டை காட்சியை படமாக்கியதும் விவேக் சாவுக்கு காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இயக்குனரிடம் விசாரணை
இதையடுத்து, லவ் யூ ரச்சு படத்தின் இயக்குனர் சங்கர்ராஜ், சண்டை பயிற்சியாளர் வினோத், கிரேன் வாகன டிரைவர் முனியப்பா, தோட்ட உரிமையாளர் புட்டராஜ் ஆகிய 4 பேரையும் பிடதி போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கன்னட சினிமா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மின்சாரம் தாக்கி சண்டை கலைஞர் விவேக் பலியான விவகாரம் தொடர்பாக இயக்குனர் உள்பட 4 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும், விசாரணைக்கு பின்பு தேவைப்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரீஸ் நேற்று நிருபர்களிடம் கூறினார்.
தயாரிப்பாளர் தலைமறைவு
இந்த சம்பவம் குறித்து பிடதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சண்டை கலைஞர் பலியானதை தொடர்ந்து லவ் யூ ரச்சு படத்தின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்ததும் தயாரிப்பாளர் குரு தேஷ்பாண்டே தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
கன்னட சினிமா படப்பிடிப்பின் போது சண்டை கலைஞர் பலியான சம்பவம் ராமநகர், பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகர் துனியா விஜய் நடித்திருந்த மாஸ்திகுடி படப்பின் போது ராமநகர் மாவட்டம் திப்பகொண்டனஹள்ளி ஏரியில் மேலே ஹெலிகாப்டரில் இருந்து குதித்த நடிகர்கள் அனில் மற்றும் உதய் ஏரியில் மூழ்கி பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
விவேக் தாய் கண்ணீர்
சினிமா படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கி விவேக் பலியானது பற்றி அறிந்ததும், அவரது தாய் செல்வி மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். விவேக்கின் தாய் கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டாம், அந்த வேலை கடினமாக இருக்கும் என்று பல முறை கூறி வந்தேன், வேலையில்லாமல் இருந்ததால் படப்பிடிப்புக்கு வந்து இறந்து விட்டானே எனக்கூறி விவேக்கின் தாய் செல்வி கண்ணீர் விட்டு கதறி அழுதபடி கூறினார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வாகனம் பழுது பார்க்கும் கடைக்கு விவேக் வேலைக்கு சென்றதாகவும், படப்பிடிப்புக்கு சென்றால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதாலும், படப்பிடிப்பில் கலந்து கொள்ள விவேக் மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததாகவும், அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.